எண்டோஸ்கோபிக் செயல்முறையின் உதவியுடன் இரண்டு நாள் அறுவை சிகிச்சையில் ஒருவரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றினர். மன உளைச்சலில் அந்த நபர் இந்த நாணயங்களை விழுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். புதன்கிழமை (ஜூலை 27) கடுமையான வயிற்று வலி புகாரில் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இரைப்பை குடல்வியல் நிபுணர் நரேந்திர பார்கவ், "வயிற்றுவலி இருப்பதாக 36 வயதான நோயாளி புகார் தெரிவித்த நிலையில், அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர்தான், மனச்சோர்வின் காரணமாக இரண்டு நாட்களில் 63 ஒரு ரூபாய் நாணயங்களை அவர் விழுங்கியது தெரியவந்தது.
அவர் புதன்கிழமை கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவர் 10-15 நாணயங்களை உட்கொண்டதாக எங்களிடம் கூறினார். நாங்கள் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்தபோது, பல நாணயங்கள் இருப்பதை கண்டோம்" என்றார். மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு இரண்டு நாட்களாக நாணயங்களை எடுக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
ஒருவர் நாணயங்களை விழுங்குவது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. பல நேரங்களில், குழந்தைகள் நாணயங்களை விழுங்குவது உண்டு. இம்மாதிரியான நேரங்களில், அறுவை சிகிச்சையின் மூலமே நாணயங்கள் அகற்றப்படுகிறது.
சமீபத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது குழந்தையின் உணவு குழாயில் இருந்து அறுவை சிகிச்சை இன்றி பேட்டரி செல்லை அகற்றி மருத்துவர்கள் சாதனைப் படைத்தனர். அதேபோல, திருவண்ணாமலை அருகே சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய தைலம் டப்பாவை அறுவை சிகிச்சையின்று அகற்றிய மருத்துவர்களை அனைவரும் பாராட்டி இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்