தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெண் ஒருவர் உயிரிழந்தும் இருக்கிறார். இதையடுத்து அங்குக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 383 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர்.

தற்போதிருக்க கூடிய காலகட்டத்தில் திடீர் திடீரெனப் புதிய வகை வைரஸ்கள் பரவி வருகிறது. சிலநேரம் அவை கொரோனாவை போல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் புதிய நோய்ப் பாதிப்புகளை நாம் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே நாம் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்த 383 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், தீவிரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களின் தொடர்பில் இருந்த 383 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் மலப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும், நான்கு பேர் பாலக்காடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவதுறை சார்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். பாலக்காடு மாவட்டம் தச்சணாட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், இரண்டு மாவட்டங்களிலும் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இது முதல்முறை இல்லை. அவ்வப்போது அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிறகு 2019, 2021, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளிலும் நிபா பாதிப்பு பதிவாகியுள்ளது.

நிபா வைரஸ் தொற்று ஏற்படும்போது காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. சிலருக்கு மயக்கம், தூக்கமின்மை மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். சில நேரங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகள், நிமோனியா, வலிப்பு, கோமா மற்றும் உயிரிழப்பு கூட நிகழலாம். இந்த வைரஸ் உடலில் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். தற்போது நிபா வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.