இந்தோனேசியாவின் டோபெலோ பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 


இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்தது, சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் நிலைகொண்டிருந்தது. மேலும் வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடவில்லை.


பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் இந்தோனேசியாவில், நிலநடுக்கும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. இந்தோனேசியாவுக்கு அடியில் உள்ள புவியோடு அடிக்கடி மோதுவதால் நிலநடுக்கும் அடிக்கடி ஏற்படுகிறது.






 


சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.


இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்தியா உட்பட பல நாடுகளும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர்.


உறைந்து கிடக்கும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகள் நிலைகுலைந்துள்ளது. குறிப்பாக, ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.


மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். 


கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது. 


தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


முன்பு வந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்


இதற்கு முன்னர், நவம்பர் 21 அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டதற்குப் பிறகு இந்தோனேசியாவில் இது மிகவும் உயிரிழப்பாக கருதப்பட்டது. அதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமியைத் வரவழைத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இது ஒரு டஜன் நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.