இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனிசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த நிலநடுக்கம் கடலுக்கு மிகவும் ஆழமாக ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும், கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் மக்களால் லேசான அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்?


இந்தோனேசியா, 27 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் ஆகும். பசிபிக் பெருங்கடலை வளைக்கும் எரிமலைகள் மற்றும் தவறான கோடுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இதன் இருப்பிடம் அமைந்துள்ளதால், இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி ஏற்படுகிறது.


கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேசியாவில் கடைசியாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ஆக  ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 340 பேர் உயிரிழந்தனர். அதோடு 7,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் ரீஜென்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 16 மாவட்டங்களில் 62,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:


ஆகஸ்ட் 18 ஆம் தேதி கொலம்பியாவில் 6.3 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. பின் சற்று நேரத்தில் மீண்டும், 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பொகோட்டாவிலிருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.  வில்லவிசென்சியோ, புகாரமங்கா, துஞ்சா மற்றும் இபாகு நகரங்களிலும் உணரப்பட்டது. 


ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் டெசோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் உள்பட மொத்த 126 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில், 20 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.