இன்று அதிகாலை இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோர் கடலுக்கு அடியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் அம்பன் தீவில் இருந்து 427 கிலோமீட்டர் (265 மைல்) தெற்கே 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.






இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) AFP அறிக்கைகளின்படி, 5.5 ரிக்டர் அளவில் சில பின்அதிர்வுகளை அறிவித்தது.


திமோர், மாலுகு தீவுக்கூட்டம் மற்றும் பப்புவா தீவுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேதம் அல்லது பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது, பின்னர் அந்த எச்சரிக்கையை பின் வாங்கியது.






ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தின் தலைநகரான டார்வின் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக, 1,000 பேர் ஆஸ்திரேலிய புவி அறிவியல் நிறுவனத்திற்குத் தெரிவித்தனர். பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.


 நவம்பர் 21 அன்று, ஜாவாவின் பிரதான தீவில் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு ஜாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 602 பேர் கொல்லப்பட்டனர். 


டிசம்பர் 26, 2004 அன்று சுமத்ராவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது, இது இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து வரை சுமார் 230,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. அந்த சக்திவாய்ந்த 9.1-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமத்ராவின் பண்டா ஆச்சே கடற்கரையைத் தாக்கி கடலில் 100 அடி வரை அலைகளைத் தூண்டியது. 


இந்தோனேசியா நாட்டில் ஜாவாவில், டிசம்பர் 3, 2022  மாலை 3.19 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 100 கி.மீ ஆழத்தில் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.