ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு ஒன்று மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள லுபிரிஹ மேல்நிலைப் பள்ளியில் (lhubiriha secondary school) இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
எல்லை நகரமான ம்போண்ட்வேயில் உள்ள ஒரு பள்ளியின் மீது ஜனநாயகப் படைகள் (allied democratic forces) நேற்று இரவு தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி தனியாருக்கு சொந்தமானது மற்றும் காங்கோ எல்லையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கு இருக்கும் மாணவர் விடுதியும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுதியில் இருந்த உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாகவும், இதுவரை 25 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு புவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மாணவர்களா என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வின்னி சிசா என்ற அரசியல் தலைவர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் டிவிட்டர் பதிவில், “ இன்று காலை இப்படி அதிர்ச்சிகரமான செய்தி கேட்டது மிகுந்த வருத்ததிற்குரிய விஷயம். பள்ளியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஏற்க முடியாத ஒன்று. பள்ளி என்பது அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இந்த தாக்குதலில் சிக்கியுள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. ஆனால் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் துரத்திச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இதே ஜனநாயக படை கிராமம் ஒன்றில் திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 1988-இல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் புகுந்த இந்த அமைப்பு, அங்குள்ள 80 மாணவர்களை உயிருடன் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது. உகாண்டாவில் காலம் காலமாக ஜனநாயக படை இது போன்ற தாக்குதல் நடத்தி வருவது அந்நாட்டிற்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.