செய்தியாளராகப் பணியாற்றுவதற்குப் பணியின் மீதான தீவிர அர்ப்பணிப்பு மிக அவசியம் என்பதைச் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்று உணர்த்தியுள்ளது. 


அமெரிக்காவில் தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் செய்தியைக் களத்தில் இருந்து வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் ஒருவரைக் கார் ஒன்று இடித்துச் சென்ற பிறகும், அவர் தொடர்ந்து தனது செய்தி வழங்கும் பணியை மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


அமெரிக்காவின் WSAZ-TV என்ற செய்தி தொலைக்காட்சியின் நிருபர் டோரி யோர்கி, செய்தி நிலையத்தில் இருந்த செய்தி தொகுப்பாளர் டிம் இர்ரிடம் செய்தியை வழங்கிக் கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று டோரி யோர்கி மீது மோதிய போது, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே கீழே இருந்து எழுந்த டோரி யோர்கி தனது செய்தி வழங்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



டோரி யோர்கி


 


அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள டன்பர் பகுதியில் இருந்த குடிநீர் இணைப்பு உடைந்திருப்பது குறித்து களத்தில் இருந்து செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது, டோரி யோர்கி மீது கார் மோதியது.






`ஓ மை காட்! இப்போது என் மீது கார் ஒன்று மோதியது; ஆனால் நான் நலமாக இருக்கிறேன், டிம்’ என அவர் கார் மோதிய பிறகு எழுந்து, செய்தி தொகுப்பாளரிடம் தெரிவித்தார். அவரிடம் செய்தி தொகுப்பாளர் டிம் இர், `தொலைக்காட்சியில் இது உங்களுக்கு இது முதல் அனுபவம், டோரி’ என்று அவரிடம் தெரிவித்தார். 


காரை ஓட்டிய பெண்ணின் குரலும் இந்த வீடியோவில் கேட்கிறது. `நீங்கள் ஓகேவா?’ என்று அந்தக் குரல் கேட்க, டோரி யோர்கி அவரிடம் தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், `லைவ் தொலைக்காட்சியில் பணி என்றால் இப்படித்தான் இருக்கும். எல்லாம் நலமாகவே இருக்கிறது. நான் கல்லூரியில் படித்த போதும், இதே போல ஒரு கார் என் மீது மோதியது. நான் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி’ எனப் புன்னகையுடன் கூறியுள்ளார் செய்தியாளர் டோரி யோர்கி. 



டோனி இர் - டோரி யோர்கி


 


`நீங்கள் காரால் இடித்து கீழே தள்ளப்பட்டீர்களா? அல்லது மேலே பறக்க விடப்பட்டீர்களா? என்னால் உண்மையிலேயே சொல்ல முடியவில்லை. திடீரென உங்களை ஸ்க்ரீனில் பார்க்க முடியவில்லை’ என செய்தி தொகுப்பாளர் டிம் இர் கேட்க, செய்தியாளர் டோரி யோர்கி, `எனக்கும் தெரியவில்லை, டிம். என் மொத்த வாழ்க்கையும் இப்போது என் கண் முன்னே வந்து சென்றது’ என்று பதிலளித்துள்ளார். 


இந்த வீடியோ தற்போது சர்வதேச அளவில் வைரலாகி இருப்பதோடு, கடுமையான சூழல்களிடையே செய்தியாளர்கள் பணியாற்றுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.