சீனாவின் புஜியான் மாகாணத்திம் ஜியாமென் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் பென்ட்ஹவுஸின் 44 வது மாடியில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் காரை வாங்கியுள்ளார். இதனை உள்ளூர் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உதவியுடன், மூன்று இரும்பு  கேபிள்களுடன் இணைக்கப்பட்ட இரும்புக் கூண்டைப் பயன்படுத்தி 44- வது மாடியின் பால்கனியில்  கொண்டு சென்று பார்க்கிங் செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்துப் பார்க்கலாம். 


விலை உயர்ந்த காரை வாங்கிய கோடீஸ்வரர் தனது காரை தரை தளத்தில் நிறுத்துவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 44-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் காரை நிறுத்த முடிவு செய்தார். ஆனால், இவ்வளவு விலை உயர்ந்த காரை 44வது மாடி வரை கொண்டு செல்வது கடினமான வேலை. இதற்கு வசதியாக ஒரு பொறியியல் நிறுவனத்தை அணுகினார்.  அவர்கள் முதலில் இந்த காரை 44வது மாடியில் நிறுத்த இரும்பு போன்ற கூண்டு தயார் செய்து தரையோடு இரும்பு கேபிள்களை கொண்டு இணைத்தனர். பின் அவரது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை கூண்டில் ஏற்றி கிரேன் மூலம் 44-வது மாடிக்கு கொண்டு சென்றனர்.


இப்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் அவரது 44வது மாடி வீட்டின் பால்கனியில் நிறுத்தப்பட்டுள்ளது. கார் உரிமையாளர் விரும்பும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அங்கேயே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்த காரை மீண்டும் சாலையில் ஓட்ட விரும்பினால், காரை மேலிருந்து கீழே கொண்டு வர வேண்டும். இதனை முழுமையாக முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனதாக கட்டுமான நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர். 


அப்படி கீழே இறக்க புதிய கூண்டு தயார் செய்து மீண்டும் கிரேன் மூலம் இறக்க வேண்டும். இதற்கு சில ஆயிரம் டாலர்கள் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இந்த செயலை சிலர் பாராட்டிய நிலையில்  அவர் தனது காரை 44-வது மாடி பால்கனியில் நிறுத்துவதற்கு செய்த செலவில் மற்றுமொரு புதிய காரையே வாங்கி இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். 


மேலும் படிக்க,


IRCTC Website Down : முடங்கியது IRCTC இணையதளம்... டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்! காரணம் என்ன?


Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!