இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. இதனால் பல கட்டடங்கள் குலுங்கியதால், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்பு அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. பாடாங் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும், இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்க விவரம்:
வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தெற்கு நியாஸ் ரீஜென்சியின் கடலோர நகரமான தெலுக் டலமுக்கு தென்கிழக்கே 170.4 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள், மாகாண தலைநகர் படாங் பகுதி மக்கள் சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கத்தை வலுவாக உணர்ந்துள்ளனர். இது பொதுமக்க்ளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் இருந்த பலரும் துரிதகதியில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் பல பகுதிகளில் அதிகாலையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. 5.8 முதல் 4.6 ரிக்டர் அளவில் குறைந்தது 5 நில அதிர்வுகள் உணரப்பட்ட பிறகே இந்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியா நில அமைப்பு:
இந்தோனேசியா, 27 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் ஆகும். பசிபிக் பெருங்கடலை வளைக்கும் எரிமலைகள் மற்றும் தவறான கோடுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இதன் இருப்பிடம் அமைந்துள்ளதால், இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி ஏற்படுகிறது.
இந்தோனேஷியா - நிலநடுக்கம்:
கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷியாவில் கடைசியாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ஆக ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 340 பேர் உயிரிழந்தனர். அதோடு 7,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் ரீஜென்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 16 மாவட்டங்களில் 62,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.