மாறி வரும் உணவு கலாசாரம், பழக்க வழக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி மிக்க உலகில், பொருளாதார சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகளை தாமதமாக பெற்று கொள்வதையே தற்போதுள்ள இளம் தம்பதியினர் விரும்புகின்றனர். ஆனால், தாமதமாக பெற்று கொள்வதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படலாம் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இச்சூழலில், 37 வயது வித்தியாசம் உள்ள ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று கொள்ள 1.14 கோடி ரூபாயை செலவிடத் தயாராக உள்ளனர். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 24 வயதான குரான் மெக்கெய்ன், 61 வயதான செரில் மெக்ரிகோரியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும், 2023 ஆம் ஆண்டு வாக்கில் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்று கொள்ள 120,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ 1.14 கோடி) செலவிட தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து குரான் கூறுகையில், "வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற கொள்ள 6,000-120,000 யூரோ வரை ஆகும். நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டம். 2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பிறக்கும்" என்றார்.
இது குரானின் முதல் குழந்தையாகும். செரிலுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 17 வயதில் ஒரு பேரகுழந்தையும் உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி பொங்க பேசிய குரான், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது நான் எப்போதும் விரும்பிய ஒன்று. என் வாழ்க்கையின் காதலியுடன் ஒரு குடும்பம் வேண்டும்" என்றார்.
இதுபற்றி செரில் கூறுகையில், "இந்தப் புதிய பயணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மற்றொரு குழந்தை ஆச்சரியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். வளைகாப்பு நடத்தலாம் என்று நம்புகிறேன்" என்றார்.
வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பாலும் செரிலை குரானின் பாட்டி என்று தவறாக நினைக்கிறார்கள்.
இதுகுறித்து மனம் திறந்த குரான், "எங்களுக்கு நேர்மறை, எதிர்மறையான கருத்துகள் கலந்தே வருகின்றன. மிக மோசமான விஷயம் என்னவென்றால், நான் அவரை பணத்திற்காக பயன்படுத்துகிறேன் என விமர்சிக்கிறார்கள். நீங்கள் விரும்பும் அளவுக்கு வெறுத்து கொள்ளுங்கள். நாங்கள் இன்னும் சாதாரண வாழ்க்கையை வாழப் போகிறோம்" என்றார்.
இந்த ஜோடி 2012 இல் குரானுக்கு 15 வயதாக இருந்தபோது சந்தித்தது. செரிலின் மகன் கிறிஸ் நிர்வகிக்கும் துரித உணவு உணவகத்தில் குரான் பணிபுரிந்தார். பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்பில் இல்லை. ஆனால் நவம்பர் 4, 2020 அன்று குரான் செரிலை மீண்டும் சந்தித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்