இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் நடத்திய எதிர்பாராத வகையில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால், பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் பிரகடனத்தை செயல்படுத்தியுள்ளது. 


இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியாக உள்ள காசாவுக்கு இருநாடுகளும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. பல ஆண்டுகளாக இருநாடுகளும் இந்த சம்பவம் தொடர்பாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் இன்றைய தினம் மீண்டும் தாக்குதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது. 


இன்று காலை காசா பகுதியில் பாலஸ்தீன ராணுவம் கிட்டதட்ட 5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியதாகவும், இதில் பல கட்டடங்கள் தரை மட்டமானதோடு, ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கிடக்கும் காட்சிகள் வீடியோக்களாக பதிவிடப்பட்டு வருகிறது. 


பாலஸ்தீன பயங்கரவாதிகள் ஆயுதங்களோடு காசா பகுதிக்கு ஊடுருவியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 80 கி.மீ. அளவுக்கு இந்த பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இஸ்ரேலின் சில இடங்களில் ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செயலிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பாலஸ்தீன படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஹமாஸின் இராணுவப் பிரிவின்  தலைவரான முகமது டெய்ஃப் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், "ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் இதுவரை 4 முறை நடைபெற்ற போரால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது அங்கு போர் பதற்றம் நிலவுவதால் இம்முறை பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.