Canada`s India Diplomats: இந்தியாவில் இருந்த தூதரக அதிகாரிகள் 41 பேரை வெளியேற்றிய கனடா அரசு, அவர்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்:
இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் அதிகாரிகளில் பெரும்பாலானோரை அந்நாட்டு அரசு வெளியேற்றி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10ம் தேதிக்குள் கனடா தூதரகத்தில் இருந்து 41 அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என, இந்திய அரசு உத்தரவ்ட்டு இருந்தது. அதனடிப்படையில் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளது.
தொடரும் கனடா - இந்தியா பிரச்னை:
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில், இந்திய "ஏஜெண்டுகளின்" பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தன. இதனிடையே, இந்தியா மற்றும் கனடா இடையேகடுமையான கருத்து மோதல் ஏற்பட்டதோடு, தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தான், இருநாடுகளுக்கு இடையே உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை சமன் செய்யும் வகையில், கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை அக்டோபர் 10ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. அதனடிப்படையில், டெல்லி தவிர நாட்டின் பிறபகுதிகளில் இருந்த கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா குற்றச்சாட்டு:
இதனிடையே, நாட்டின் உள்விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகள் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ”கனடாவில் உள்ள இந்தியாவின் பலத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கனட தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அது குறைக்கப்பட வேண்டும். இராஜதந்திர வலிமையில் சமநிலையை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது” என பேசினார்.
இந்தியாவின் எதிர்ப்பு நடவடிக்கை:
இந்திய நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள இந்தியாவிற்கான முன்னாள் கனடா தூதர் கேபி ஃபேபியன், “ தற்போது கனடாவில் 21 இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளனர். அதேநேரம் இந்தியாவில் கனடா தூதரக அதிகாரிகள் 62 பேர் உள்ளனர். எனவே, அதன் தூதரக ஊழியர்களில் 41 பேர் திரும்பப் பெறப்பட வேண்டும். அதாவது, கனடா ஒரு தூதரக அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, 42 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு எப்போதும் பொருந்தாது. ஆனால், கனடாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.