இந்தோனேஷியாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழை மற்றும் மலை சரிவுகள் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆங்காங்கே எரிமலை வெடித்துள்ளதால் அதனின் சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரியளவில் சேறும், செகதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 41 பேர் இறந்திருக்கலாம் என்றும், 17 பேரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தி தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவிக்கையில், “ திடீர் பருவமழை மற்றும் மராபி மலையில் உள்ள எரிமலையில் சரிவால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தின்போது பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர், 100க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நீரில் மூழ்கின” என்று தெரிவித்தார்.
காணாமல் போனவர்களை தேடும் பணி:
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில், மீட்பு பணியாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அகம் மாவட்டத்தில் உள்ள கண்டுவாங் கிராமத்தில் 19 உடல்களையும், பக்கத்து மாவட்டமான தனாஹ் தாதாரில் 9 உடல்களையும், படாங்கில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 8 உடல்களை மீட்டதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது. மேலும், காணாமல் போன 18 பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.
மேற்கு சுமத்ரா பேரிடர் தணிப்பு முகமை அதிகாரி இல்ஹாம் வஹாப், “நேற்று இரவு வரை 31 பேர் இறந்ததாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால், இன்று காலை முதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை பல்வேறு இடங்களில் நடந்த மீட்பு நடவடிக்கையில் சுமார் 2000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.