Taylor Swift: ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் இசை நிகழ்ச்சி, வரலாறு காணாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.


ஜெர்மனியில் டெய்லர் ஸ்விஃப்ட்:


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், உலகின் பல்வேறு நாடுகளில், ”Eras Tour” என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். குறிப்பாக, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளின், பொருளாதாரமே பெரும் ஊக்கம் பெறுவதாகவும் தகவல்களும், ஆய்வுகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான், ஜெர்மனி நாட்டின் முனிச் பகுதியில் நடைபெற்ற, அவரது இசை நிகழ்ச்சியை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். 






மலையின் மீது குவிந்த 40 ஆயிரம் ரசிகர்கள்:


முனிச் நகரில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியன் மைதானத்தில் டெய்லர் ஸ்விஃப்டின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அதை நேரில் காண சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டிக்கெட்டுகளை வாங்கி அங்கு குவிந்தனர். இதனால் இசைநிகழ்ச்சியின் போது, ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் அந்த மைதானம் கரைபுரண்டது. அதேநேரம், மைதானத்திற்கு வெளியே குவிந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களின், கரகோஷங்களால் மொத்த மைதானமே அதிர்ந்தது என்றே கூற வேண்டும். நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைக்காத நிலையில், ஒலிம்பியாஸ்டேடியனுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பிரமாண்ட ஒலிபெருக்கிகள் வாயிலாக ஸ்விஃப்டின் பாடல்களை கேட்டு ரசிகர்கள் கொண்டாடினர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் எதிர்பார்த்ததை விட தனக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக, நிகக்ஷ்ச்ச் மேடையிலேயே டெய்லர் ஸ்விஃப்ட் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.






புதிய சாதனை:


ஜெர்மனியின் முனிச் நகரில் அதிகப்படியான பார்வையாளர்களை (74,000) பெற்ற, பெண் கலைஞரின் இசைநிகழ்ச்சி என்ற சாதனையை  கடந்த வாரம் டெய்லர் ஸ்விஃப்ட் படைத்தார். அடுத்த சில தினங்களிலேயே அந்த சாதனையை, அவரே மீண்டும் முறியடித்துள்ளார். அதன்படி, கடந்த சனிக்கிழமை நடந்த டெய்லர் ஸ்விஃப்டின் இசைநிகழ்ச்சியில், மைதானத்திற்கு உள்ளே மற்று வெளியே என, மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.