அமெரிக்க அதிபர் ஜோ பைடனையே கிண்டலடிக்கும் விதமாக, டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டு இருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.


வரி கட்ட சொன்ன அதிபர்:


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ”பெரும் செல்வந்தர்கள் தங்கள் நியாயமான பங்கைச் செலுத்தத் தொடங்கும் நேரம் இது” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டிவிட்டர் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் அளித்த பதில், தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


அதிபரையே கலாய்த்த எலான் மஸ்க்:


அதிபர் பைடனின் டிவிட்டிற்கு பதிலளித்த எலான் மஸ்க் “தயவு செய்து அவரது டிவிட்டர் கணக்கிற்கான கடவுச்சொல்லை அவரிடம் கொடுங்கள். அப்போது தான் அவரால் சொந்தமாக டிவீட் செய்ய முடியும். உங்களிடம் நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்” என நக்கலாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.






அரசின் மீது குற்றச்சாட்டு:


மற்றொரு டிவிட்டர் பதிவில் ”அனைத்து தீவிரத்தன்மையிலும், விரிவான வரி-தவிர்ப்பு திட்டங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைச் செயல்படுத்துவது நிறைய நன்கொடையாளர்களை வருத்தப்படுத்தும். அதனால் தான் அந்த திட்டங்களை தவிர்ப்பது தொடர்பாக  அரசாங்கங்கள் பேசினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. உண்மையில் அதிகப்படியான அரசாங்க செலவினங்களின் சுமையை சுமக்க நிர்பந்திக்கப்படுபவர்கள் நடுத்தர வருமானத்தை விட குறைவான வருமானம் உள்ளவர்கள் தான்.  ஏனென்றால் அவர்கள் ஊதிய வரியிலிருந்து தப்பிக்க முடியாது” என எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.


தேர்தல் பரப்புரை:


பிலடெல்பியா பகுதியில் பரப்புரையில் பேசிய அதிபர் பைடன், மீண்டும் தான் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தேர்வானால் பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு எதிராக புதிய வரிச்சட்டங்களை கொண்டு வருவேன் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் பேசினார். அமெரிக்காவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளதாகவும், அவர்களது வருவாயில் 8% மட்டுமே வரியாக செலுத்தி வருவதாகவும் கூறினார். 


பைடன் அதிரடி:
தொடர்ந்து, ”அமெரிக்க பில்லியனர்கள்  பள்ளி ஆசிரியர்களை விடவும், தீயணைப்பு வீரர்களை விடவும் குறைந்த வரியை செலுத்துகின்றனர். அவர்கள் குறைந்தபட்ச வரி செலுத்த வேண்டிய நேரம் இது. அவர்கள் பில்லியனர்கள் என்பதில் எனக்கு கவலையில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கான நியாயமான வரி பங்கை செலுத்த வேண்டும் “ என்றார். இப்படி பெரும் பணக்காரர்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பைடன் கூறி வரும் நிலையில் தான், அவரது கருத்தை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.