சிங்கப்பூரில் தற்பாலின சேர்க்கை மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் லீ சின் லூங் தொலைக்காட்சியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனை LGBT ஆர்வலர்கள் மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இந்த புதிய அறிவிப்பின்படி ஆண்களுக்கு இடையேயான தற்பாலின சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்பாலின சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை.
சிங்கப்பூர் நாடானது பழமைவாத கொள்கைகளுக்குப் பெயர் போனது. ஆனால் அங்கு சமீப காலமாகவே எல்ஜிபிடி சமூகத்தினர் சட்டப்பிரிவு 377 A வை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ஆசிய நாடுகளில் தற்பாலினச் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்த நாடுகளின் பட்டியலில் கடைசியாக சேர்ந்துள்ளது சிங்கப்பூர். முன்னதாக இந்தியா, தைவான், தாய்லாந்து நாடுகள் ஓரிணச் சேர்க்கையாளர்களை அங்கீகரித்திருந்தன. இந்நிலையில் ஞாயிறு இரவு சிங்கப்பூர் பிரதமர் லீ தற்பாலினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிப்பதாக அறிவித்தார். பின்னர் அவர் பேசுகையில், இனி சிங்கப்பூரில் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். இது தேசத்தின் சட்டங்களில் சமூகம் விரும்பும் புதுமையைத் தரும். சட்டப்பிரிவு 377A நீக்கப்படுகிறது என்றார்.
இது குறித்து சிங்கப்பூர் LGBT ஆர்வலர், செயற்பாட்டாளர் ஜான்சன் ஓங் கூறுகையில், ஒருவழியாக போராடி வென்றுவிட்டோம். பழமைவாத, பாரபட்சம் நிறைந்த சட்டம் இனி வழக்கத்தில் இருக்காது. இன்று நாங்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.
கவனிக்கப்பட வேண்டிய நுணுக்கம்:
சிங்கப்பூர் அரசு ஓரிணச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கி இருந்தாலும், அரசாங்கம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் திருமணத்தை தான் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும். இதனால் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஊக்குவிக்கப்படுவது தடுக்கப்படும் என்ற நுணுக்கமான உட்பிரிவும் உள்ளது. இந்த உட்பிரிவு முழுமையான சுதந்திரத்தைத் தராமல் கடிவாலம் இட்டுள்ளதாக தற்பாலினச் சேர்க்கை செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு இல்லாமல் இல்லை:
கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க ப்ரொடக்ட் சிங்கப்பூர் Protect Singapore என்ற பழமைவாத குழுவானது அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றளிப்பதாகக் கூறியுள்ளது. அதனால் சட்டப் புத்தகத்தில் திருமணத்தின் அர்த்தத்தை வலியுறுத்தி திருத்தங்கள் வர வேண்டும். அதுவே குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என்று தெரிவித்துள்ளனர்.