ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த தற்கொலை படை பயங்கரவாதியை ரஷிய மத்திய பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்தியாவின் மூத்த தலைவர் ஒருவரை கொல்ல அவர் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.






இதுகுறித்து ரஷிய மத்திய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், "ரஷியாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.


அவர் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய ஆளும் வர்க்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை தற்கொலை படை தாக்குதலின் மூலம் கொல்ல பயங்கரவாதச் செயலைச் செய்யத் திட்டமிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர் துருக்கியில் இருந்து தற்கொலை படை பயங்கரவாதியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஆட் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.


ஐஎஸ்ஐஸ் மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, மத்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.


ஐஎஸ்ஐஎஸ் தனது சித்தாந்தத்தைப் பரப்ப பல்வேறு இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், இணையத்தை உன்னிப்பாகக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.






சமீபத்தில், முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூரப் சர்மா சர்ச்சைக்குரிய விதமாக பேசியது உலகளவில் பெரும் எதிர்ப்பாக கிளம்பியது. குறிப்பாக, அரபு நாடுகள் வெளிப்படையாகவே எதிர்பினை பதிவு செய்தன. இதையடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 


இந்த சம்பவத்திற்கு இடையே, தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டம் அம்பலம் ஆகி உள்ளது.