செய்யாத குற்றத்துக்காக ஒன்றல்ல, இரண்டல்ல 32 ஆண்டுகள் தங்களின் பதின்ம வயது தொட்டு சிறைத் தண்டனை அனுபவித்த கறுப்பின நபர்கள் இருவருக்கு 75 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கிறது அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சிவில் உரிமைகள் நீதிமன்றம். 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நல்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் ஹென்ரி மெக்கூலம், லியோன் பிரவுன் ஆகிய இருவரும் சகோதரர்கள். கடந்த 1983ம் ஆண்டு இவர்கள் மீது ராபீசன் கவுண்ட்டியின் ரெட் ஸ்ப்ரிங்கஸ் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் சார்பில் தாக்கலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள். இருவர் மீதுமான குற்றச்சாட்டு போலியானது. ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்தனர். இருவரும் நிரபராதிகள். அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிகளாக்கியுள்ளனர். இந்தத் தருணத்திலாவது அவர்களுக்கான நீதியை நாங்கள் வழங்குகிறோம். சட்டத்தின் வாயிலாக அதைச் செய்கிறோம். இருவருக்கும் தலா 31 மில்லியன் டாலர் இழப்பீடு, அவர்கள் சிறையிலிருந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் (மொத்தம் 31 ஆண்டுகள்) ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு மற்றும் தண்டனைக் காலம் ஏற்படுத்தியதற்காக தலா 13 மில்லியன் டாலர் என மொத்தம் தலா 75 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இருவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆப்ராம்ஸ் கூறும்போது, ‛இருவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் அநீதி முடிவுக்கு வந்தது. சிவில் உரிமைகள் நீதிமன்றம் கடைசியாக ஹென்ரி, லியோனின் வாழ்க்கையில் மிகக்கோரமான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்கள், குடும்பத்தினர், நேசத்துக்குரியவர்களுடன் பிரகாசமான எதிர்காலத்தை அனுபவிக்கவுள்ளனர்.
ஹென்ரியும், லீயோனும் 2014ல் விடுதலை செய்யப்பட்டனர். மரபணு (டிஎன்ஏ) ஆதாரம் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இருவரும் 2015ல் விசாரணையின்போது தங்களின் சிவில் உரிமைகள் மீறப்பட்டது. அதுவே தங்களைக் குற்றவாளிகளாக காவல்துறையால் ஜோடிக்க வழிவகுத்தது என்று கூறி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தான் இப்போது இருவருக்கும் தலா 75 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கிடைத்திருக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதிகளும் தண்டனை வழங்கப்பட்டபோது மெக்கூலம் வயது 19, பிரவுன் வயது 15. இருவருமே போலீஸாரால் வற்புறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களின் அறிவுக்கூர்மையும் குறைவாகவே இருந்திருக்கும். போலீஸாரின் நெருக்கடியால் குற்றத்தை ஒப்புக்கொண்டு. செய்யாத குற்றத்துக்காக தண்டனையை அனுபவித்துள்ளனர்,’ என்றார்.
இந்த வழக்கில் ராபீஸன் கவுண்ட்டி ஷெரீப் அலுவலகம் தனது சார்பிலான 9 மில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்கியது.
இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட மெக்கூலம் கூறும்போது, "எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால், சிறையில் என்னைப்போல் நிறைய அப்பாவிகள் இருக்கின்றனர். அவர்கள் அங்கே இருக்க வேண்டியர்கள் அல்ல" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
32 ஆண்டுகளாக நிரபராதிகளை தண்டனை அனுபவிக்கச் செய்த்த இந்த வழக்கைப் பார்க்கும்போது, ஜார்ஜ் ஃப்ளாய்டைப் போல் இன்னும் நிறைய கறுப்பினத்தவர் மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே தெரிய வருகிறது.