உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் உள்ளன. அந்தவகையில் சமீபத்தில் பெண் ஒருவர் காணாமல் போன சில நாட்களுக்கு பிறகு அவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு நடந்தது என்ன? கொலையாளிகளை காவல்துறையினர் எப்படி கண்டறிந்தனர்?


அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் பிரியானா ராபர்ட்ஸ் என்ற 21 வயது மதிக்க தக்க பெண் கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் வேறு ஒரு வழக்கு தொடர்பாக ஒருவருக்கு சம்மன் கொடுக்க போலிங்கர் கவுண்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு இடத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் ஒன்று இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 




இதைத் தொடர்ந்து அந்த சடலத்தை கைப்பற்றி அவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த சடலத்தை அடையாளம் கண்டு கொள்ள முயற்சி செய்தனர். அதில் அந்த சடலம் காணாமல் போன பிரியானாவின் சடலம் என்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பிரியானாவை கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்ற வகையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரை கடைசியாக தொடர்பு கொண்ட எரிக் நானி மற்றும் கெட்லின் மோர்கன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 


மேலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த எரிக் நானியின் தந்தை ரிக் நானியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உடற்கூறு ஆய்விற்கு பின்பு தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த மூன்று பேரும் எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தனர் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மூன்று பேர் மீதும் பெண்ணை கொலை செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


பெண் ஒருவர் காணாமல் போன மூன்று நாட்களில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 112 கிலோ மீட்டர் தூரத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது. 


மேலும் படிக்க: வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் தாக்குதல்: ஒருவர் படுகொலை