வங்கதேசத்தில் இஸ்கான் கோயிலில் இந்துக்கள் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
வங்கதேச நாட்டில் நவகாளி எனுமிடத்தில் இஸ்கான் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் இன்று காலை வன்முறை கும்பல் ஒன்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பக்தர்கள் 200 பேர் காயமடைந்தனர். பார்தா தாஸ் என்ற இஸ்கான் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் கோயிலின் குளத்தில் மிதந்தது. இதில் கோயிலும் கடுமையாக சேதமடைந்தது. சில பக்தர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அரசை கேட்டுக்கொள்கிறோம். வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் வங்கதேசத்தின் கமீலா எனும் பகுதியில் உள்ள துர்கா பூஜா பந்தலில் முஸ்லிம்களின் புனித நூலான குரான் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்தை அடுத்து துர்கா பூஜை பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்துக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், இந்துக்களின் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவித்தால் சட்டம் சும்மா விடாது என தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அதற்கடுத்ததாக, மூன்று நாட்களில் நவகாளியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
வரலாற்றின் பக்கங்களில் நவகாளிப் படுகொலைகள்:
நவகாளி என்ற பெயரைக் கேட்டதுமே வரலாறு நம்மை 1946-ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்லும். நவகாளிப் படுகொலைகள் என்பதை நாம் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம். இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை வெடித்தது. இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறைகள் அரங்கேறியதாக வரலாறு கூறுகிறது.
இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் எல்லை காந்தி என்றழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கானும் பயணம் செய்தார். இதுவே பின்னாளில் நவகாளி யாத்திரை எனப்பட்டது. பிரிவினைக்கு முன் இந்தியாவில் இருந்த நவகாளி இப்போது வங்கதேசத்தில் இருக்கிறது.
மேலும் உலகச் செய்திகளைப் படிக்க: