ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் வெட்கக்கேடான ஆடை அணிந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 24 வயது பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பொது அநாகரீகத்துக்கு குந்தகம் விளைவித்ததாக இப்பெண் மீது முன்னதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எட்டு நாட்களுக்கு முன்னர் பிரபல பிரெஞ்சு இசைக்கலைஞர் தைக்கின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லிலியான் முகாபெகாசி ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று, மெல்லிய ஆடை அணிந்ததால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், "அவர் அந்தரங்க பாகங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துகொண்டு கச்சேரி ஒன்றில் கலந்துகொண்டார்... நாம் வெட்கக்கேடானது என்று அழைக்கும் உடைகள். இது ஒரு மோசமான குற்றம். இந்தத் தீவிரமான குற்றங்களின் அடிப்படையில்தான் முகாபெகாசியை 30 நாட்கள் ரிமாண்ட் செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தோம்.
அவர் பொது இடத்தில் அநாகரீகமாக செயல்பட்டதாக சந்தேகிக்கிறோம். அவர் ஜாமீன் பெறுவாரா என்பதை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்" என்றார்.
இந்நிலையில், முன்னதாக இப்பெண் கைது செய்யப்பட்ட செய்தி ருவாண்டா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான்ஸ்டன் புசிங்கே உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளனர்.
இதுபற்றி பிரிட்டனுக்கான ருவாண்டாவின் தூதராக உள்ள பஸ்ங்கியே,"நம்முடைய இளைஞர்களும் பெண்களும் குடித்துவிட்டு மயக்கமடைந்து, பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றும் தற்போதைய பிரச்சினை ஆட்சேபனைக்குரியது. இந்தப் பிரச்னையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் போஸ்கோ கபேரா, "இளைஞர்களிடையே ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரீகம் அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கல் தீவிரமடைந்து வருகிறது. பேன்ட், ஷார்ட்ஸ் இல்லாமல் ஒரு நபர் சட்டையை மட்டுமே அணிந்திருப்பதைக் காணலாம். இவர்கள், வலை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்கின்றனர்" எனக் கூறினார்.
அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரிடம் “அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் விருப்பப்படி உடை அணிய உரிமை இல்லையா” என்று கேட்டதற்கு, “அநாகரீகமாக உடை அணியாமல், நன்றாக உடை அணிவதே உரிமை” என்று பதிலளித்தார்.