அனைவருக்கும் அமெரிக்க செல்வது என்பது வாழ்நாள் கனவாகும். குறிப்பாக, இளம் தலைமுறையினர் அமெரிக்கா செல்வதை கனவாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில், பார்வையாளர் விசா பெற 2024 வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இணையதளத்தில் தனியார் தொலைக்காட்சியான என்டிடிவி ஆய்வு செய்ததில், விசாவுக்கான சராசரி காத்திருப்பு நேரம் ஒன்றரை ஆண்டுகள் என தெரிய வந்துள்ளது. எனவே, அமெரிக்க செல்ல திட்டமிடுவோர் வரும் 2024 மார்ச் - மே மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக இணையளதளத்தில் விசா பெறுவதற்கான சராசரி காத்திருப்பு நேரம் பார்வையாளர் விசாக்களுக்கு 522 நாட்களும் மாணவர் விசாக்களுக்கு 471 நாட்களும் என்பது தெரிய வந்துள்ளது.
மும்பையில் இருந்து அமெரிக்க செல்ல விசா பெறுவதற்கான சராசரி காத்திருப்பு நேரம் பார்வையாளர் விசாவிற்கு 517 நாட்கள் ஆகும். மாணவர் விசாவிற்கு 10 நாட்கள் என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து ஒருவர் அமெரிக்க செல்ல திட்டமிட்டால், அவர் புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர் 198 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும். மும்பையில் இருப்பவர் 72 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை, பார்வையாளர் விசாவிற்கான காத்திருப்பு நேரம் 557 நாட்களாகும். மற்ற அனைத்து புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு 185 நாட்களும் ஆகும். ஹைதராபாத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், பார்வையாளர் விசாவைப் பெற 518 நாட்கள் காத்திருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணையதளத்தின் விசா பக்கத்தில், "அமெரிக்க தூதரகத்தில் நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் வாரந்தோறும் மாறலாம். இது, பணிச்சுமை மற்றும் பணியாளர்களின் அடிப்படையிலானது. மதிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என உத்தரவாதம் அளிக்க முடியாது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதங்கள் பற்றிய செய்திகளுக்கு பதிலளித்த அமெரிக்க தூதரகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத பயணிகளுக்கு அமெரிக்காவிற்கு முறையான பயணத்தை எளிதாக்குவதற்கு வெளியுறவுத்துறை உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளது.
இதுகுறித்து தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பெருந்தொற்றால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளை தீவிரமாக நிவர்த்தி செய்வதன் மூலம் காத்திருப்பு நேரங்கள் மற்றும் பின்னடைவுகளை குறைக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, புதிய ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் அமெரிக்க அலுவலர்களின் தூதரக பணியமர்த்தலை வெளியுறவுத்துறை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. மேலும் புதிதாக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரக பதவிகளுக்கு செல்கின்றனர்" என்றார்.
முன்னதாக, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்ல விசா எடுக்க அதிக நேரமாவதாக செய்திகள் வெளியாகின.