ஆஃப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அடுத்தவாரம் பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அனைத்து தரப்புகளுக்குமான பிரதிநிதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம்பெறவில்லை என ஆப்கானிஸ்தானில் எதிர்ப்பலை உருவாகிவருகிறது. குறிப்பாக அமைச்சரவையில் பெண்களே இல்லை என்பது அங்கே பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.  முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், ‘அனைத்து தரப்பினர்களுக்குமான பிரதிநிதிகள் அமைச்சரவையில் இருப்பது நல்லது’ எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களும் தொடர்ச்சியாக ஆங்காங்கே எதிர்ப்புகளைப்ப் பதிவு செய்து வருகின்றனர். 











இதற்கிடையே ஆப்கானின் டோலோ நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது செகருல்லா ஹஷ்மி ‘பெண்கள் அமைச்சர்களாக முடியாது.அமைச்சரவையில் பெண்கள் இருக்கவேண்டியது அவசியமற்றது. அவர்களது வேலை பிள்ளை பெற்றுக் கொடுப்பதுதான்’ எனப் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. 






இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களது தலைமையிலான புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். ஆஃப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபானின் முகமது ஹசன் அகூண்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த செய்தியை தலிபானின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியிருந்தார். மேலும், இந்த அரசு தற்காலிக அரசாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். தலிபான் தலைவரான அப்துல் கனி பர்தார் துணை அதிபராகப் பதவி வகிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.இது தவிர இரண்டாம் நிலை துணை அதிபராக மவுல்வி ஹன்னாஃபியும் பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா யக்கூப் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்தித்தொடர்பாளர் சபிஹுல்லா  வெளியிட்டிருந்தார்.