நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் 19 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இது நமது வரலாற்றில் மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் அதில் பாதிபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஐந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பலர் மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் செங்கல் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான கரும் புகை வெளியேறுவதைக் காட்டியது. மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது வெளியாகி இருந்தது.
நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்துள்ளது. நேற்று இந்த கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க் நகர மேயர் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 2ஆவது மோசமான தீ விபத்து இதுவாகும். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.