பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்:
போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ஒன்றை ஈரான் பாதுகாப்பு படை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பலானது இத்தாலி - சுவிஸ் நாட்டை சேர்ந்த எம்எஸ்சி நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியர்கள் சென்ற கப்பலை பறிமுதல் செய்த ஈரான்:
அதுமட்டும் இன்றி, கப்பலில் சென்ற 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எம்எஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றபோது எம்எஸ்சி ஆரிஸ் கப்பலில் ஈரானிய அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி, பறிமுதல் செய்தனர்.
அந்த கப்பலில் 25 பணியாளர்கள் உள்ளனர். மேலும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், கப்பலைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெறவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி எடுத்து வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை தவிர்த்து பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 4 பேர், பாகிஸ்தானியர் ஒருவர், ரஷிய நாட்டை சேர்ந்த ஒருவர், எஸ்டோனியா நாட்டை சேர்ந்த ஒருவரும் கப்பலில் பயணம் செய்துள்ளனர். இந்திய பணியாளர்களை விடுதலை செய்வதற்காக இந்திய அரசு, ஈரான் அரசை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் உடனான மோதல் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை பறிமுதல் செய்வதையும் தாக்குதல் நடத்துவதையும் ஈரான் வாடிக்கையாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.