Australia terror attack: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டது மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வணிக வளாகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவில், தனிநபர் ஒருவர் தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், கட்டடத்திற்குள் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர். தகவலறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பலரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிலர் உயிருக்கு போராடி வருதாக கூறப்படுகிறது. இதனிடையே, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.