பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஃப்ரிட்ஜுக்குள் பதுங்கிய 11 வயது சிறுவன் உயிர்பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


பிலிப்பைன்ஸ் நாட்டின் பேபே நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து சின்னபின்னம் ஆயின. அந்த நாட்டில் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற பெயரில் வீசிய புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள ஆற்றங்கரை ஓரத்தில் மண்ணில் லேசாக புதைந்தபடி ஒரு குளிர்சாதன பெட்டி கிடந்ததை கண்டுள்ளனர். அதை எடுத்த தீயணைப்புப் படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 11 வயது சிறுவன் உயிரோடு இருந்ததை அந்த வீரர்கள் கண்டுள்ளனர்.



அந்த சிறுவன் அங்கு வந்தது குறித்து அவரிடம் வீரர்கள் விசாரித்ததில், பெயர் சிஜே ஜாஸ்மே என்பது தெரியவந்தது. அதிக வேக காற்றுடன் புயல் வீசியதாகவும், அதனைக் கண்டு பயந்து தப்பிக்க வழி தேடியதாகவும், எல்லா இடங்களும் ஆபத்துக்குரிய இடமாக இருந்ததாகவும், அப்போது இந்த ஃப்ரிட்ஜை கண்டதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு பிரிட்ஜுக்குள் சென்று ஒளிந்துகொண்டதாக அந்த சிறுவன் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஃப்ரிட்ஜை திறந்து சிறுவனை மீட்டதும் அவர் சொன்ன முதல் வார்த்தை 'பசிக்கிறது' என்பதுதான் என அவரை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் கூறினர். ஃப்ரிட்ஜிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெட்சரில் வைத்து எடுத்துச் செல்லப்படும்போதெல்லாம் பசிக்கிறது, பசிக்கிறது என்று கூறிக்கொண்டே வந்துள்ளார். மீட்கும்போது, சிறுவன் ஜாஸ்மே விழித்துக்கொண்டு இருந்ததாகவும், நிலச்சரிவின்போது ஃப்ரிட்ஜ் உருண்டு புரண்டதில் அவரது கால் மட்டும் உடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ் காவல்துறை, சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். அவரது தந்தை வேறொரு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது தாய் மற்றும் தங்கையை குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதேபோல் சிறுவனின் 13 வயது மூத்த சகோதரனும் நிலச்சரிவிலிருந்து தப்பித்து இருப்பார் என்று போலீசார் நம்புகின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.


பேபே நகரில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர், 200 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். இந்த புயல் காரணமாக அந்த மாகாணத்தைவிட்டு 20 கோடி பேர் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் சேரும், சகதியுமாக காட்சி தருவதால் மீட்புப்பணிகள், மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.