பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி அருகில் வெடிகுண்டு வெடித்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


குண்டுவெடித்து 11 பேர் உயிரிழப்பு:


பாகிஸ்தான் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் ராணுவச் சாவடிக்கு தொழிலாளர்கள் வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தில் குண்டி வெடித்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்றுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு படையினர் இருவரையும் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வெடி குண்டு விபத்தில் மேலும் சில தொழிலாளிகள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் இடைக்கால பிரதமரான அன்வார்-உல்-ஹக்கர் கடும் கண்டனத்தை தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


தொடரும் பயங்கரவாத சம்பவங்கள்: 


பாகிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத செய்லபாடுகள் அதிகரித்து வருகிறது. ஒரு மாத காலத்தில் நடைபெறும் இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும். பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர். ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் தாக்குதல் நடந்தபோது 500 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையின்போது, மர்ம  நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை படையாக செயல்பட்டது தெரிய வந்தது.


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை,  ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.