மூன்று மாநிலங்களிலும் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் 2 பேர் என மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 




எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின், போடிநாயக்கனூரில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.




இந்தத் தேர்தலில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 திருநங்கைகள் அடங்குவர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்காளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.