நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலால் திமுக குஷியில் உள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான அதிமுக பலமாக அடிவாங்கியுள்ளது.  மாநகராட்சிகளில் திமுக 43.59 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. அதிமுக 24 சதவிகித வாக்குகளை பெற்றது. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை  திமுக 41.91%, அதிமுக  25.56% வாக்குகளை பெற்றது. இந்த வாக்கு சதவீதம் அதிமுகவின் பலவீனத்தை காட்டியது. பல முக்கிய அதிமுக தலைவர்களின் இடங்களிலேயே அதிமுக அடிவாங்கியது. இது அக்கட்சிக்குள் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


அமமுக தனித்து நிற்பதே அதிமுகவுக்கு தொடர் வீழ்ச்சி என கூறப்படும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு அதனை மேலும் அழுத்திக்கூற தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டுமென குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆங்காங்கே போஸ்டர்களும், தீர்மானங்களும் கண்ணில் சிக்கின. ஆனால் தேனி மாவட்டம் ஒரு பிரளயத்தை உண்டாக்கத் தொடங்கியது.




தேனி மாவட்டம்


அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் வரும் 5ம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலையே இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பு உள்ளாக்கி உள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.


இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக படுதோல்வியை சந்தித்தற்கு பெரும்காரணமாக இருந்தது அமமுக என்றும், எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினார்கள்.  இது தொடர்பாக தீர்மானமும் போட்டபட்டு உள்ளது. குறிப்பாக சசிகலா மற்றும் தினகரனை குறி வைத்தே இந்த தீர்மானம் போடப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக வரும் 5ம் தேதி முறைப்படி தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. இதில் முறைப்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. 




பரபரப்பை கிளப்பிய முன்னாள் எம்.எல்.ஏ.


சசிகலா இணைப்பு ஓபிஎஸ் வரை சென்றுவிட்டது என அரசியல் வட்டாரம் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும்போதே செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.  மேலும் அதிமுக தலைமை சரியில்லாத காரணத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும்.  அதிமுகவில் எனக்கு பொறுப்பு தரவில்லை என்பதற்காக சசிகலாவுக்கு ஆதரவாக நான் பேசவில்லை என்றார். இரண்டு முறை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி சசிகலா தலைமை குறித்து பேசியிருப்பது தமிழக மற்றும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “ஓபிஎஸ் கட்சியில் கையெழுத்து போட்டால்தான் எதுவும் நடக்கும். அந்த பவர் ஓபிஎஸ்சுக்கு உண்டு. ஆனால் எடப்பாடியை எதிர்த்து அவர் எதுவும் செய்ய முடியாது. எடப்பாடிக்கும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அந்தஸ்து இருக்கிறது. அவரும் தனித்து செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் இது இப்படியே ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போகுமே தவிர சசிகலாவை கட்சிக்கு தலைமையாக்க மாட்டார்கள். ஓபிஎஸ் சும்மா காய் நகர்த்தி பார்க்கிறார் அவ்வளவுதான். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்வதற்காக. ஆனால் அவருக்கு சசிகலாவை முழுமையாக ஏற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன்னுடைய பவரை காண்பிக்க முயற்சிக்கிறார் ஓபிஎஸ். வேண்டுமானால் ஸ்டாலின் வைகோவை வைத்திருப்பது போன்று சில இடங்களை கொடுத்து கட்சியில் அமமுகவை அங்கமாக வைக்க இடமுண்டு. அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார். 


மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில், “சட்டமன்றத்தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரித்துள்ளது என்பது நிதர்சன உண்மை. அதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அதற்கு தலைமை இல்லாததே காரணம் என நிர்வாகிகள் கருதுகின்றனர். அதனால்தான் கட்சியினர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கின்றனர்.