வீரா கொலை வழக்கு என்கவுண்டர் முதல் வெள்ளம் வரை கடலூரில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

 

பிப்ரவரி - கடலூரின் முதல் என்கவுன்டர்

 



 

கடலூர் சுப்புராயலு நகர் குப்பம்குளத்தைச் சேர்ந்த வீரா (எ) வீரவேங்கையன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார், பின்னர் கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் என்கவுண்டர் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

 

9 மணி நேரத்தில் 19 செ.மீ கொட்டி தீர்த்த மழை

 



 

கடலூரில் கடந்த பிப்ரவரி மாதம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9 மணி நேரத்தில் 19 செ.மீ மழை கொட்டி தீர்த்ததால் கடலூரில் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் பெரும்பாலான குடியிருப்புகளில் தண்ணீர் நுழைந்ததால் குளிரால் மூதாட்டி உயிரிழந்தார்.

 

ஏப்ரல் - கடலூருக்கு படை எடுத்து பாண்டிச்சேரி குடிமகன்கள் 

 


 

பாண்டிச்சேரியில் கொரோனா வரி காரணமாக மதுவின் விலை ஏற்றபட்டதால், கடலூரை விட பாண்டிச்சேரியில் விலை அதிகமாக விற்கபட்டதால், பாண்டிசேரியில் இருந்து கடலூருக்கு கூட்டம் கூட்டமாக வந்து ஏராளமானோர் மது வாங்கி சென்றனர்.

 

மே - 10 ஆண்டுகளுக்கு பிறகு கடலூரை கைப்பற்றிய திமுக 

 



 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து ஆண்டுகளாக கடலூரில் ஆட்சியில் இருந்த அதிமுகவை சேர்ந்த எம்.சி.சம்பதை திமுக வேட்பாளர் அய்யப்பன் தோற்கடித்து மீண்டும் கடலூர் சட்டமன்ற உறுப்பினரானார். மேலும் கடலூரில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் வென்ற எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், திட்டக்குடி தொகுதியில் வென்ற சி.வி.கணேசனும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

 

சிப்காட் பகுதியில் இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து

 



 

கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் பணிபுரிந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர் மேலும் 15 பேர் விபத்தில் வெளியான புகையால் மயக்கம் அடைந்தனர். இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

 

ஜூலை - சுருக்கு வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள்  சாலை மறியல் 

 



 

கடலூர் மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் கடலூர் பாரதி சாலையில் தொடர்ந்து 10 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர், பின்னர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

 

ஆகஸ்ட் - கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள் 

 



 

கொரோனா காரணமாக கோயில்களில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் முன்னரே திருமணம் செய்ய முடிவு செய்தவர்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில் வாசலிலேயே பெரும் அளவு திருமணங்கள் நடைபெற்றன.

 

செப்டம்பர் - கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு

 



 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் முருகேசன் என்பவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணான கண்ணகியை காதலித்தால் கண்ணகியின் பெற்றோரால் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய முதல் ஆனவக்கொலையான இந்த கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் நீதிமன்றத்தில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனையும், காவலர்கள் உட்பட 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

 

அக்டோபர் - கடலூர் திமுக எம்பி ரமேஷ் கொலை வழக்கில் சிறை சென்றார் 

 



 

கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக திமுக எம்பி ரமேஷ் சேர்க்கப்பட்டார், இதன்காரணமாக அக்டோபர் 11 ஆம் தேதி திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார், பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

கடலூர் மாநகராட்சியாக உருவெடுத்தது 

 



 

சட்டமன்ற கூட்டத்தொடரில் கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் இயற்றப்பட்டு கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

 

நவம்பர் - கடலூரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் 



 

கடலூரில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

 

30 ரூபாய்க்கு விற்கபட்ட தக்காளி

 



 

தமிழகம் முழுவதும் மழையால் தக்காளி விலை 100 ரூபாயை கடந்து விற்பனையான நிலையில் கடலூர் முதுநகர் பகுதியில் காய்கறி கடையில் மக்களுக்காக தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விர்க்கபட்டது.

 

ஜெய் பீம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவிந்தன்



 

நவம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படம் பல சர்ச்சைகளை கிளப்பியது இதில், உண்மையில் பார்வதி குடும்பத்திற்காக போராடிய கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தை சேர்ந்த கோவித்தனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தப்பட்ட நிலையில் "தான் கம்யூனிஸ்ட், வன்னியர் இல்லை" என நமது ABP நாடு செய்திக்கு பிரத்தியேக பேட்டி அளித்து முற்றுப்புள்ளி வைத்தார். 

 

டிசம்பர் - கடைசி நேரத்தில் முடிவான சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்



 

விமர்சையாக கொண்டாடப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு கொரோனா காரணமாக மக்கள் கலந்துகொள்ளவும் தேரோட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் தேரோட்டத்திற்கு முன்தினம் இரவு பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் கடைசி நிமிடத்தில் ஆருத்ரா தரிசன விழாவுக்கும் தேரோட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.