விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு "நமது நிலம், நமது எதிர்காலம் என்ற இலக்கினை அடையும் வகையில் மரக்கன்று நடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தொடங்கி வைத்து, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசுக்கு சொந்தமான இடங்களில் மரங்களை நட்டு பராமரித்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை சார்பில், "நமது நிலம், நமது எதிர்காலம் என்ற இலக்கினை அடையும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
அந்த வகையில் சிறுவர் பூங்காவில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையிலும், நிழல் தரும் வகையிலும் 50 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும். மாவட்டம் முழுவதும் நாவல், வேம்பு, நாகலிங்கம், அரசமரம், செண்பக மரம், புன்னை மரம், அத்திரம் வகைகள் கொண்ட 1.0 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் முக்கிய இலக்கு நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு உள்ளிட்டவைகளாகும்.
தற்பொழுது கோடைக்காலங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகுவதற்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாததே முக்கிய காரணமாகும். மரக்கன்றினை நட்டு வளர்ப்பதன் மூலம் நமக்கு தூய்மையான காற்று, மழை, கோடைக்காலங்களில் வெப்பக்காற்றினை தவிர்க்கலாம்.
எனவே, ஒவ்வொருவரும் தங்கள் குடியிருப்புகள், பணிபுரியும் இடங்களில் கட்டாயம் ஒரு மரக்கன்றாவது நட்டு பராமரித்திட வேண்டும். நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் வளமிக்க இயற்கையினை உருவாக்கித் தருவதற்கு மரங்களை நட்டு வளர்த்திடுவோம் எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சுற்றுச்சூலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி நெகிழிப்பைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலர் பவித்ரா, வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.