உலக எய்ட்ஸ்‌ தினத்தினை முன்னிட்டு, எச்‌.ஐ.வி மற்றும்‌ எய்ட்ஸ்‌ குறித்த உறுதிமொழி மற்றும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்‌ கட்டுப்பாட்டு சங்கம்‌ மற்றும்‌ மாவட்ட எய்ட்ஸ்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாட்டு அலகு சார்பில்‌, உலக எய்ட்ஸ்‌ தினம்‌ - 2023 முன்னிட்டு கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய்‌ நாராயணன்‌ முன்னிலையில்‌, உறுதிமொழி மற்றும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ இன்று (01.12.2023) நடைபெற்றது.


பொதுமக்களிடையே எய்ட்ஸ்‌ நோய்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்‌, நோய்‌ பாதித்தவர்கள்‌ எவ்வித தாழ்வு மனப்பான்மையும்‌ இல்லாமல்‌ சமூகத்தில்‌ தானும்‌ ஒரு அங்கம்‌ என்பதை உணர்ந்திடும்‌ பொருட்டும்‌, அரசால்‌ வழங்கப்பட்டு வரும்‌ மருத்துவ சிகிச்சைகள்‌ மற்றும்‌ இதர உதவிகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்‌ பொருட்டு, டிசம்பர்‌ 1-ஆம்‌ தேதியினை எய்ட்ஸ்‌ தினமாக உலக சுகாதார நிறுவனமாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்‌ உலக எய்ட்ஸ்‌ தினம்‌ டிசம்பர்‌ 1-ஆம்‌ தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.




தொடர்ந்து, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ பொதுமக்களுக்கு எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌, எய்ட்ஸ்‌ தின உறுதிமொழியான "எச்‌.ஐ.வி மற்றும்‌ எய்ட்ஸ்‌ குறித்து முழுமையாக நான்‌ அறிந்திடுவேன். அறிந்ததை என்‌ குடும்பத்திலுள்ள அனைவருக்கும்‌ தெரிவித்திடுவேன்‌. புதிய எச்‌.ஐ.வி, எய்ட்ஸ்‌ தொற்று இல்லாத குடும்பம்‌ மற்றும்‌ சமூகத்தை உருவாக்கிடுவேன்‌. தன்னார்வமாக இரத்தப்‌ பரிசோதனை செய்துகொள்ள முன்வருவேன்‌. எச்‌.ஐ.வி மற்றும்‌ எய்ட்ஸ்‌ தொற்றுள்ளோரை அரவணைப்பேன்‌. அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன்‌” என அனைத்துத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


தொடர்ந்து, எச்‌.ஐ.வி / எய்ட்ஸ்‌ குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ அவர்கள்‌ மற்றும்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) அவர்கள்‌ ஆகியோர்‌ கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்‌. மேலும்‌, வாகனங்களில்‌ எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌ குறித்த விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டியும்‌, எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌ குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌. தொடர்ந்து, எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌ விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட வினாடி, நாடக போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும்‌ பாராட்டுச்சான்றிதழ்களையும்‌, எய்ட்ஸ்‌ தடுப்பு குறித்து சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும்‌, 05 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும்‌, 05 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்கள்‌.




அட்வைசர் சுபா அவர்கள் கூறியதாவது...


மேலும் எச்ஐவி பாதித்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களுக்கு எவ்வித அறிவுரை வழங்க வேண்டும் எனவும் எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக சுபா கூறுகையில், எச்ஐவி பாதித்தவர்கள் மனதளவில் உடைந்தவர்களாக இருப்பார்கள், முதலில் அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை அளிக்க வேண்டும் அதன் பிறகு எந்த மாதிரி உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் எப்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என பல அறிவுரைகளை வழங்கவும்.  எச்ஐவி பாதித்தவர்கள் சரியான முறையில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகள் தானிய வகைகள் முட்டை ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் எனவும்  எச்ஐவி பாதித்தவர்களும் நம்மில் ஒருவர் என நினைத்து அவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுக்கு தன்னம்பிக்கை தர வேண்டும் என சுபா கூறினார்