குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.
அகமதாபாத் விமான விபத்து:
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வெடிவிபத்து நிகழ்ந்தபோது வெளியான வெப்பம் காரணமாக 1300 டிகிரி செல்சியஸ் வெப்பம் அந்த இடத்தில் பதிவானது. தீ காரணமாகவும், வெப்பம் காரணமாகவும் உயிரிழந்த பயணிகள் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது.
அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்:
உடல்கள் அனைத்தையும் தற்போது அடையாளம் காணும் பணி மருத்துவ குழுவினரால் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் சவாலான இந்த பணியில் தற்போது வரை 19 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு அறிவித்தார்.
222 உடல்கள் கதி என்ன?
அதில், இரவு 9 மணி நிலவரப்படி 19 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில தடய அறிவியல் ஆய்வக பிரிவு குழுவினரும், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக குழுவும் உடல்களை அடையாளம் காண தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அமைச்சரின் அறிவிப்பின்படி, எஞ்சிய 222 பயணிகளின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை.
வெளிநாட்டு பயணிகள்:
இந்த விமான விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் இருந்தனர். அவர்களது உடல்களை அடையாளம் காண்பதற்காக விமான விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பயணிகளின் உறவினர்களின் டிஎன்ஏ-க்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் சவாலான இந்த பணியில் விரைவில் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பயணிகளின் உறவினர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட வரையில் உடல்கள் ஒப்படைக்கும் பணியை குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
274 உயிர்கள்:
இந்த கோர விபத்தின் துயரத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி விமானம் சென்று மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்த விமான விபத்து மொத்தம் 274 பேர் உயிரை பறித்தது. அதேசமயம், அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் உரிய இறுதிச்சடங்குடன் அடக்கம் செய்ய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.