மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 நிவாரண முகாம்கள், 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள், தேசிய பேரிடர் மீட்புபடையினர் 65 பேர் என மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையினரும் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாளில் 10 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் எவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




அதேபோல் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற்றப்படுவதையும் ஆய்வு செய்யப்பட்டது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 4 பல்நோக்கு பாதுகாப்பு நிவாரண முகாம்கள், 26 முன்னெச்சரிக்கை கருவிகள், 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மிகவும் தாழ்வான பகுதிகளில் 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார் தெரிவிக்க 04364 222588, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 


Train Movie Pooja: விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - 'திகில்' வெற்றி தருவாரா மிஷ்கின்?


மேலும் 65 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து சீர்காழியில் 30 நபர்களும், தரங்கம்பாடியில் 35 நபர்களும்  தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.




முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வேட்டங்குடி, தொடுவாய் கிராமம், கூழையாறு கிராமம் பக்கிங்காம் கால்வாய், வேட்டங்குடி முடவனாறு, மடவாமேடு, புதுப்பட்டினம் ஊராட்சி பழையார் கிராமத்தில் உள்ள சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்கள். இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.