புதுவை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் அரசு மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் வயது குழந்தை சாஹவ்வுக்கு நினைவாற்றல் திறமைக்காக விருது வழங்கப்பட்டது. கவர்னர் தமிழிசை விருதை வழங்கினார். குழந்தை சாஹவ் 31 விநாடிகளில் 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அதன் பெயரை சரியாக சொல்லி 359 பொருட்களின் பெயரை கண்டறிந்து சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த குழந்தையின் திறமையை பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பரிசும் அளிக்கப்பட்டது. பிராந்திய அளவில் மேல்நிலை பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அட்டவணை, பழங்குடியின மாணவர்கள் ரோகித், அபிநயா, விஜய், பிரியங்கா ஆகியோருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப்பரிசாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. புதுவை பகுதியில் சிறந்து விளங்கிய திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.


செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:


தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 3 முறை 5 ஆயிரம் அடி தாண்டினால் தான் கிளியர். யாரையும் காக்க வைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. 2 குழந்தைக்கு அம்மா. சிறு குழந்தைகள் இருப்பதை பற்றி எனக்கு தெரியும். எதிர்பாராத விதமாகவும் சில சம்பவங்கள் நடைபெறும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். புதுவை அலங்கார ஊர்திகள் அழகாக இருந்தன. சிறுதானிய ஊர்தி, போதைப்பழக்கத்தை கைவிட விழிப்புணர்வு வாகனங்கள் அழகாக இருந்தது. குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் மனநிறைவாக இருந்தது.  குடியரசு தினவிழாவை குறைத்து மதிப்பிட்டு தெலுங்கானா அரசு எந்த அறிவிப்பும் இல்லாமல், பொதுமக்கள் நலன் விரும்பி நீதிமன்றதிக்கு சென்றதால் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. நேரம் குறைவாக இருந்ததால் அரசு செய்ய முடியாததால், தேசியக்கொடிக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கிவிட்டு வந்தேன். தெலுங்கானாவில் சட்டமீறல், விதி மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் நடந்துள்ளது.


தெலுங்கானா மக்கள் என் மீது அதிக நேசம் வைத்துள்ளனர். ஒரு அரசு வேண்டுமென்றே விதிமீறல்களை செய்கிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என நினைத்து ஆளுநரை எதிர்க்கிறார். கவர்னர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என கூறுபவர்கள், முதலமைச்சர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என கேட்கட்டும். தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பியுள்ளோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நேரடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். அவர்கள் மீது பிளாக் மார்க் வந்துவிடக்கூடாது. மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என நினைக்கிறேன். என் மீது காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விவோம் என்ற வசனம்போல செயல்படுகிறேன்.


ஸ்மார்ட் மீட்டர் போன்ற அரசின் கொள்கை முடிவுகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்களிடம் கேளுங்கள். நான் அரசுக்கு பாலமாக செயல்படுகிறேன். மக்கள் நலனுக்காக நான் சொல்வதை வேறுமாதிரி எடுத்துக்கொள்கிறீர்கள். இனி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சரிடம் கேளுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன், செயல்படுகிறேன்.  முன்பு இருந்த ஆளுநர்கள் மக்களுக்கான திட்டங்களுக்கு கூட தடை போட்டனர். நாங்கள் ரூ1000ம் வழங்கியுள்ளோம். எனவே யாருக்கு என்ன சந்தேகம் உண்டா அதை துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.