விழுப்புரம்: விழுப்புரத்தில், துணை முதல்வர் உதயநிதி தலைமையில் வரும் 6ம் தேதி, அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. மேலும் மாவட்ட வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வேளாண், தொழில்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், திட்டப்பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வணிகர் சங்கம், விவசாய சங்கம் மற்றும் மீனவ சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளிடம், கோரிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் சார்பில், விழுப்புரம் நகரில் ஐ.டி. பார்க்., மற்றும் மாவட்டத்தில் கனரக தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும். விளை நிலம் இல்லாத பகுதிகளில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் பயிற்சி, உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்திடவும், வணிக வளாகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மேலும், பொற்கொல்லர்களுக்கு பாதுகாப்பான தொழில் பூங்கா அமைக்கவும், திண்டிவனத்தில் மருத்துவமனை மற்றும் திண்டிவனம் சிட்கோ தொழில்பேட்டைக்கு தனி துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். முந்திரி, வாழை, பலா போன்ற வேளாண் விளை பொருட்களை மதிப்புகூட்டி வருவாய் ஈட்டும் வகையில், தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வானுார் தாலுகா, உப்பு வேலுார் கிராமத்தில் மார்க்கெட் கமிட்டி, செஞ்சியில் வேளாண் உற்பத்தி கருவிகள் நிலையம், மாவட்டத்தில், வேளாண் கல்லுாரி, திண்டிவனம், செஞ்சி பகுதியில் நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், முதல்வரிடம் முன் வைக்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்தாய்வு
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், துணை முதல்வர் உதயநிதி சுற்றுப் பயணம் செய்கிறார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், 6ம் தேதி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார். இதையடுத்து, விழுப்புரத்தில் கடந்தாண்டு நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின்போது, முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் நிலை குறித்து, துணை முதல்வர் தலைமையில் ஆய்வு நடைபெற உள்ளது.
திட்டப்பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பில் தீவிரம்
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. மாவட்ட வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வேளாண். தொழில்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், திட்டப்பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.