தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் இவை மூன்றும் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் முக்கிய வணிக வீதியான காமராஜர் வீதி, திரு விக வீதி, எம் ஜி ரோடு, பாகர்ஷா வீதிகளில் உள்ள துணிகடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் இன்று அதிகலையில் அலைமோதுகின்றன.


மேலும் மக்களை கவர்வதற்காக பல வகையான ட்ரெண்டிங் புத்தாடைகள், பாப்கார்ன் மெட்டீரியல், என மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வந்தனர். மக்கள் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் விழுப்புரத்தில் 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பினை சரி செய்ய கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




புதுச்சேரியில் களைகட்டிய வியாபாரம் 


தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. புதிய ஆடைகள், பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், வெளி மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இறைச்சிகளின் விற்பனை  மும்முரம் 


நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளிலும் ஆடு கோழி போன்ற இறைச்சிகளின் விற்பனை  மும்முரமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே இறைச்சிக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வகைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்று வருகின்றனர். ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.


இந்த நிலையில்  ஒரு கிலோ சிக்கன் 250 ரூபாய்க்கும், மட்டன் ஒரு கிலோ 1000 ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழி கிலோ 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் இறைச்சி கடைகளில் கூடுவதால் வரிசையில் நிற்குமாறு இறைச்சிக் கடைக்காரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, மீன் கடைகளிலும் ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்துள்ளனர்.




சங்கரா, சீலா, மத்தி, வஞ்சிரம், கிழங்கான், கிளிமூக்கு, வாவல் உள்ளிட்ட வகை கடல்மீன்களும், நெய்மீன், கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட டேம் மீன்களும் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் இறால், நண்டு உள்ளிட்டவை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 


தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. நேற்று இரவு முதல் அதிகளவிலான பொதுமக்கள் பேருந்துகளில் பயணித்தனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் பேருந்துகள் அதிகரித்து காணப்பட்டன. விழுப்புரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களிலும் படியில் பயணித்தவாறு பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையிலிருந்து வரும் பேருந்துகளிலும், சிறப்புப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


மக்கள் கூட்டத்தை பொருத்து, விழுப்புரத்திலிருந்து திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, வழிபறி உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் உயர்கோபுரக் கூண்டு அமைத்து கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் நகருக்குள் அதிகளவிலான வாகனங்கள் வந்தால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.