விழுப்புரம்: அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை செம்மைபடுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்காகவும் தங்களது கிராமம் அமைந்துள்ள ஏரிகள்/ குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்/ களிமண் ஆகியவற்றினை இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


வண்டல் மண்/ களிமண் ஆகியவற்றினை இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை செம்மைபடுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்காகவும் தங்களது கிராமம் அமைந்துள்ள வட்டத்திற்குட்பட்ட உள்ள கிராமங்களில் அமையபெற்றுள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள் / குளங்களில் படிந்துள்ள வண்டல் மண் / களிமண் ஆகியவற்றினை இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளவும், ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்து கொள்ளவும் தமிழ்நாடு அரசினால் விலையில்லாமல் வண்டல் மண் / களிமண் முதலியவற்றை விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களுக்கு வழங்க தகுதிவாய்ந்த 263 நீர்நிலைகளின் விவரம், புல எண் மற்றும் அகற்ற முடிவு செய்துள்ள அதிகபட்ச கனிமத்தின் அளவு குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக விவரங்கள் பெறப்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு மூலம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.


இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விலையில்லாமல் வண்டல் மண்


அதனடிப்படையில், நன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடுகள்), புன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்), வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் (10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர் லோடுகள்) என்ற அளவிற்கு வண்டல் மண் / களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். விவசாய நிலங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களின் உபயோகத்திற்கு ஏற்றார்போல் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று இணையவழியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.


இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம்


மேலும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டும் மற்றும் களிமண் தேவைப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது விபரங்களுடனும் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி,  தெரிவித்துள்ளார்.