விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே விசிக தலைவர் பிறந்த நாள் அன்று கொடி கம்பம் வைத்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் இருவர் அடித்து கொண்ட செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அக்கட்சி நிர்வாகிகள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் அருகேயுள்ள தொரவி கிராமத்தில் கடந்த  ஆகஸ்ட் 17 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிடு கட்சியின் கொடிகம்பம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சி கொடியினை இருசக்கர வாகனத்தை கட்டி கொண்டி யார் முன்னே செல்வது அக்கட்சியை சார்ந்த இரு இளைஞர்கள் பொது வெளியில் தாக்கி கொண்டனர். விசிகவை சார்ந்த இருவர் தாக்கி கொள்வதை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் என்பவர் செய்தியாக வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை ஏன் வெளியிட்டீர்கள் என அக்கட்சியை சார்ந்த கார்த்தி என்பவர் செய்தியாளரை தொலைபேசியில் அழைத்து மிரட்டியுள்ளார்.


இந்நிலையில் விசிக சார்பில் தொரவியில் வைக்கப்பட்ட கட்சி கொடி கம்பத்தினை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைத்துள்ளதை செய்தி சேகரிக்க சென்றபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருணை விசிகவை சார்ந்த கட்சி நிர்வாகிகள் கார்த்தி உள்பட்ட மூவர் இணைந்து எப்படி நாங்கள் அடித்து கொண்டதை செய்தியாக வெளியிடுவாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி  தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இதனையும் செய்தியாக வெளியிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கபட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தியாளரை தாக்கி தலைமறைவாகிய கார்த்தி மற்றும் இரு இளைஞரை தேடி வருகின்றனர்.