விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் உள்ள 16-வது சதுப்பு நில கழுவெளி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மத்தியில் 15 ஆயிரம் ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கழுவெளி சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. இதை தமிழக அரசு 16-வது கழுவெளி சதுப்பு நில பறவைகள் சரணாலயமாக அறிவித்தது, சதுப்பு நிலப்பகுதியை சுற்றி 720 ஏரி மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன, கழுவெளி பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பதால் நண்டு, மீன், இறால் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கடல் நீரும் உட்புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விவசாயமும் நல்ல முறையில் நடை பெற்று வருகிறது.




இப்படி இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர்நிலைகளை தேடி ஆண்டுதோறும் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதுண்டு. அந்த வகையில் தற்போது சீனா, இலங்கை, பாகிஸ்தான், போன்ற வெளிநாட்டு பறவைகள் புகலிடம் தேடி வந்துள்ளன, இதில் அழிவின் விளிம்பில் உள்ள கூழக்கடா, அருவாள் மூக்கான் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை, , நீர்காகம், செந்நாரை,  கரண்டி மூக்கன், புள்ளி, மூக்கு வாத்து, ஆளா, நாமக்கோழி, பாம்பு கழுத்து நாரை, சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இந்த பறவைகள் 3 மாதத்துக்கு மேல் இங்கு தங்கி இருந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.




பின்னர் பருவநிலை மாறியதும் மீண்டும் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பி செல்கின்றன. வண்டி பாளையம் கழுவெளி பகுதியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்து செல்கின்றனர். பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் பல சமூக விரோதிகள் அதை இறைச்சிக்காக வேட்டையாடுவது உண்டு எனவே வனத்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு கழுவெளி பகுதியை பாதுகாக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.