விழுப்புரம் மாவட்டம் பிள்ளைசாவடி ஈ.சி. ஆர் சாலையில் தமிழக அரசு சொகுசு பேருந்து தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதில் பேருந்து டிரைவர் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் இருந்து கும்பகோணம் செல்ல தமிழக அரசு குளிரூட்டப்பட்ட சொகுசு விரைவு பேருந்து நேற்று இரவு சென்னையில் புறப்பட்டது.  ஈசிஆர் சாலை வழியாக மகாபலிபுரம், மரக்காணம் வழியாக கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அரியலூரைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் ஓட்டி வந்தார். விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி அருகே சென்று கொண்டு இருந்த பேருந்து புதுச்சேரி பகுதியான காலாப்பட்டு பகுதியை தாண்டி தமிழகப் பகுதிக்குள் நுழைந்தது. பிள்ளைச்சாவடி பகுதியில் ஈ.சி.ஆர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டையில்  (செண்டர் மீடியன்) பேருந்து வேகமாக மோதியது. இதில் டிரைவரின் அருகில் படுத்து வந்த கண்டக்டர் மேகநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பேருந்து மோதியவுடன் தூக்கத்தில் இருந்த பயணிகளின் இடிபாடுகளில் சிக்கினர்.






 


பயணிகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடி வந்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டிய ராஜராஜன், கண்டக்டர் மேகநாதன் பேருந்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தினகர், மயிலாடுதுறை இளையராஜா, சீர்காழி ஜெயராஜ், நாகப்பட்டினம் முத்தரசன்,பாபநாசம் சௌமியா, ரகுநாத் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.


இவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டி வந்த ராஜராஜன் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு பகுதியை தாண்டும் பொழுது முன்னாள் சென்ற காரை முந்த முயன்றதில் ஈசிஆர் சாலையின் தடுப்பு கட்டையில் மோதியது தெரியவந்தது. பேருந்தின் முன் பகுதி இரண்டாகப் பிளந்ததால் கிரேன்  மூலம் பேருந்தை போலீசார் மீட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.