விழுப்புரம் விஏஒ கையொப்பத்துடன் கூடிய தாள்களின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் காந்திசிலை, கீழ்பெரும்பாக்கம், மகாராஜபுரம், எருமனந்தாங்கல், மருதூர், பூந்தோட்டம் உள்ளிட்ட வருவாய் துறைக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் விழுப்புரம் நகர்புறத்திற்கான கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்கு விழுப்புரம் நகர வி.ஏ.ஒ வாக பணிபுரியும் சதீஷ் அலுவலகத்திற்கு சரிவர வராத நிலையில் விழுப்புரம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்-ன் கையொப்பத்துடன் கூடிய வெள்ளை தாள்கள் பொதுமக்கள் தேவைகளுக்காக பணம் பெற்றுக் கொண்டு கொடுக்கப்படுவதாக அவரின் கையொப்பமிட்ட ஸ்டாம்ப் சீல் உடனான வெள்ளை தாள்கள் உடனான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் மனுவிற்கான பரிந்துரையும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பமிட்ட 50க்கும் மேற்பட்ட வெள்ளைத் தாள்கள் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.




இதுகுறித்து விழுப்புரம் நகர கிராம நிர்வாக அலுவலர் (VAO) சதீஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆன்லைனில் விழுப்புரம் மாவட்டம் என்று குறிப்பிடும் போது அது தவறுதலாக விழுப்புரம் நகரம் என தேர்வாகி முதியோர் உதவி தொகை (OAP) பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நிறைய அளவில் நிலுவையில் உள்ளதாகவும் அந்த மனுகளுக்காக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் காலித் தாள்களில் எதற்காக கையொப்பம் உள்ளது என கேட்டதற்கு, விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஓஏபி செக்ஷன் தாசில்தார் அதனை  தேவைக்கேற்றவாறு நிரப்பிக் கொள்வார் என்று கூறினார். இவரது பதில்கள் முழுவதும் மழுப்பலாகவே இருந்தது.






 


இதுதொடர்பாக அரசு அதிகாரியிடம் கேட்டபோது, இதுபோன்று வெள்ளைத் தாளில் முத்திரை பதித்து கையெழுத்து இட்டு அலுவலகத்தில் வைப்பது குற்றச்செயலாகும் எனவும் மேலும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர் இது குறித்தான எழுத்து விளக்கமாகவும் வாய்மொழியாகவும் பதில் அளிக்க நேரிடும் என தெரிவித்தார்.