கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா வடபொன்பரப்பியை சேர்ந்தவர் குணசீலன் மனைவி பாரதி, 26; அங்குள்ள காமராஜர் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் தனக்கும், தன்னுடன் உறுப்பினராக உள்ள 13 பேருக்கும், கறவை மாடு கடன் பெறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பங்களை மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை செய்ய, தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தரான விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார், 35; என்பவர் ஒவ்வொருவரிடமும் தலா 1000 ரூபாய் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பின், 10,000 கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் குணசீலன் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய பணத்தை, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்த சுரேஷ்குமாரிடம் நேற்று மதியம் 2:30 மணியளவில் குணசீலன் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பால்சுதர், இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு சில ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 34 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ்குமாரிடம் விசாரித்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா, மூக்கனுாரை சேர்ந்த இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கறவை மாடு வழங்குவதற்கு தலா 17 ஆயிரம் வீதம் மொத்தம் 34 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ்குமாரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து சுரேஷ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.