செஞ்சி அருகே அரசு மதுபான கடையில் ரூ.27.5 லட்சம் பணம் கையாடல் செய்த மேற்பார்வையாளர் உட்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வரிக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் (கடை எண்:11606) திருச்சி முதல்நிலை மண்டல மேலாளர் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு முதல் சோதனை மேற்கொண்டதில் ரூபாய் 27 லட்சத்து 69 ஆயிரத்து 980 ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரிக்கல் மதுபான கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அர்ஜுனன்(50) மற்றும் விற்பனையாளராக பணியாற்றி வந்த அசோகன் (47) ஆகிய இருவரையும் டாஸ்மாக் விழுப்புரம் மாவட்ட மேலாளர் ராமு தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மதுபான கடையில் ரூபாய் 27.5 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.