விழுப்புரம் : திருவக்கரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரையில் பட்டியலின மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வீட்டின் வாயிலில் உள்ள சாலைகளிலையே கழிவு நீர் வழிந்தோடி சாலைகள் சேறும் சகதியுமாக நோய் தொற்று ஏற்படும் வகையில் இருக்கிறது. இதனால் பட்டியலின மக்களுக்கு வாந்தி, காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ராமச்சந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளைப் பொறுத்தவரை ஊராட்சி மன்ற தலைவராகிய தன்னால் எதுவும் செய்ய முடியாது முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாஸ்கர் தான் செய்யவேண்டும். அவர் கூறினால் செய்கிறேன் என அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்படுவதாக திருவக்கரை பட்டியலின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே போன்று தங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் வானூர், மயிலம், திருக்கனூர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை
விழுப்புரம்: பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் திருவக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊராட்சியில் தெருமின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி தலைவர் மோகனா ராமச்சந்திரனிடம் சென்று சென்று கேட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவர், நான் தலைவர் தான், ஆனால் என்னை உருவாக்கியவர், ஊராட்சி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தவர் எல்லாம் இதற்கு முன்பு தொடர்ந்து ஊராட்சி தலைவராக இருந்த பாஸ்கர்தான். ஆகவே அவர் சொன்னால்தான் என்னால் எதையுமே செய்ய முடியும் என்றும், தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார்.
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவரை சென்று கேளுங்கள்..
அவரிடம் சென்று கிராம சபை கூட்டத்தை எங்கள் ஆதிதிராவிடர் பகுதியில் நடத்துமாறு கேட்டால் பாஸ்கரிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறார். பாஸ்கர் வீட்டுக்கு சென்று கேட்டால் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவரை சென்று கேளுங்கள் என்கிறார். எங்களுக்காக இந்த ஊராட்சி தனி ஊராட்சியாக ஒதுக்கப்பட்டிருந்தும், எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் எங்களுக்காக எதுவுமே செய்ய மறுக்கிறார்.
இதனால் அடிப்படை வசதிகள் இன்றி நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.