விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சுகுமார் (வயது 28) தொழிலாளி. இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கலத்துமேடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் திவ்யா (வயது 20) கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. எனவே இருவரும் அடிக்கடி தொலைப்பேசி மூலம் பேசியுள்ளனர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம்ஃ இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் திவ்யாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது சுகுமாரின் குடிப்பழக்கம். அவருக்கு திருமணத்திற்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அதனை திவ்யாவிடம் இருந்து மறைத்துள்ளார்.


இதனால் அவ்வப்போது தனது கணவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுகுமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திவ்யாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் அருகில் வர வேண்டாம் என தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார், படுத்து இருந்த திவ்யாவை அருகில் இருக்கும் இரும்பு கம்பி எடுத்து தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.


ரத்த வெள்ளத்தில் மிதந்த திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு பயந்த சுகுமார் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதுபற்றி அறிந்ததும் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதற்கிடையில் திவ்யாவின் உடலை கைப்பற்றி அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாரை கைது செய்தனர். மதுபோதையில் இருந்த கணவன் மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.