விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகம் டி.எடையார் சேர்ந்தவர் முத்துசாமி. அவரது மகன் அருண்குமார். விழுப்புரத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல்போனது. எனவே மோட்டார் சைக்கிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருண்குமாரின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் அருணை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் இரவு நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது நண்பர்களிடம் விசாரிக்க சென்றபோது அவர்களும் மாயமாகி இருந்தனர்.



இதற்கிடையில் அருண்குமாரின் இன்னொரு நண்பர் ஒருவர் முத்துசாமியிடம் உங்களது மகனை 4 பேர் அடித்து கொன்று ஏரியில் உள்ள கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவித்தார். பதறிபோன முத்துசாமி இரவு முழுவதும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கிணறாக தேடினர். ஆனால் அருண்குமார் கிடைக்கவில்லை. நேற்று காலை அருண்குமார் கிராமத்தில் உள்ள ஏரி கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த முத்துசாமி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.



தகவல் அறிந்த விழுப்புரம்  டி.எஸ்.பி. பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர்  செல்வக்குமார், உதவி காவல் ஆய்வாளர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்குமார் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே பிரேதத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்களிடம் தெரிவிக்காமல் எப்படி உடலை எடுத்து செல்லலாம் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து முத்துசாமி கூறுகையில், எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான்.



கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று தெரிவித்தார். எனினும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் எடையார் பஸ் நிறுத்தம் பகுதியில் கடலூர்-திருக்கோவிலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விசாரணையை முடுக்கினர். இதன்பேரில் அருண்குமாரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கீர்த்திவர்மன் (17), சத்யன் (16), சரசுராஜ் (17), வீரமணி (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.




அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு:


இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி  மாணவன் அருணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உயர்க்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடிக்கு உறவினர்களும் கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. தேர்தலுக்கு வாக்கு வாங்க மட்டுமே வருவதாகவும் இதுவரை இந்த தொகுதிக்கோ, சொந்த ஊருக்கோ கூட அமைச்சராகி என்ன செய்தீர்கள் எனவும் கஞ்சா விற்பனையை தடுக்க கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அஞ்சலி செலுத்த வந்தீர்களா என மக்கள் சராமாரி கேள்வி எழுப்பினர். கிராம மக்கள் மாணவரின் பிரேதத்தை உள்ளே வைத்து பூட்டிக்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்பு காவல்துறையினரை கொண்டு கதவுகளை உடைத்து உள்ளே சென்ற அமைச்சர் பொன்முடி மாணவன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு கடும் கோபத்தோடு வெளியேறினார். சொந்த தொகுதியில் சொந்த ஊர் மக்களால் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு கிளம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண