விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21 வயது). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த சிலர் திருடி சென்று உள்ளனர். இதனை அறிந்த அருண் தனது இருச்சக்கர வாகனத்தை திருப்பி தருமாறு கேட்டு அந்த இளைஞர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சண்டையிட்டுள்ளார்.


அந்த பதிவை செல்போனில் பதிவு செய்துள்ளார்.  மேலும் காவல் நிலையத்தில் எனது இரு சக்கர வாகனம் தரவில்லை என்றால் இந்த பதிவை காவல் நிலையத்தில் கொடுத்து விடுவேன் எனவும் அருண் சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் இருச்சகர வாகனத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறி அருணை பனப்பாக்கம் ஏரிக்கு வரவழைத்துள்ளனர். அருண் வந்தவுடன் அவரை அந்த கும்பல் அடித்தும் கழுத்தை நெறித்தும் கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அருணை காணாமல் தேடிய உறவினர்கள் கிணற்றில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்துவந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சரத், கீர்த்தி, சத்தியன் உட்பட 4 பேர் நேற்று இரவு அருணை அழைத்துச்சென்றதும், இந்த 4 பேரும் இருசக்கர வாகனங்கள் திருடர்கள் எனவும் மற்றும் கஞ்சா போதை பழக்கம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.




மேலும் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது, கஞ்சா கிடைப்பதாகவும் இதனால் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் ஆளாகி வருவதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கிராம மக்களும் இளைஞர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பழக்கங்களால் இளைஞர்களின் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண