வெகு விமரிசையாக நடந்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விழுப்புரம் : வெகு விமரிசையாக நடைபெற்ற பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

விழுப்புரம் அடுத்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது. 3 ஆம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமாக இந்த கோவில் விளங்குகிறது. விழா கடந்த 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் நாள் காப்பு கட்டுதலும், நேற்று முன்தினம் சுவாமிக்கு கண் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 6: 00 மணிக்கு கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக்கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளையும் அணிந்து தங்களை புதுமணப்பெண்கள் போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருநங்கைகள், கோயிலுக்குள் சென்று அரவாண் சாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்து அரவாணை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டதோடு ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநங்கைள் மட்டுமின்றி வேண்டுதலின் பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர். தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சியளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகம் அடைந்தனர்.

விழாவின் 8 ஆவது நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் வந்தடைந்ததும் அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola